யுக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போரில், 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை குறைந்தது 4 இலட்சத்து 90 ஆயிரத்து 334 ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் புள்ளிவிபரத் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையான 1.1 கோடிக்கும் அதிகமான இறப்புப் பதிவுகளை சர்வதேச ரஷ்ய சேவை ஆய்வு செய்துள்ளது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சைபர் பார்ட்டிசன்ஸ் BY மற்றும் யுக்ரைனின் சைலண்ட் க்ரோ (Silent Crow) ஆகிய குழுக்களின் இணைய ஊடுருவலைத் தொடர்ந்து இந்தத் தரவுகள் கசிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவுகளை ரஷ்யாவின் சுயாதீன ஊடகமான மீடியாசோனாவுடன் இணைந்து பிபிசி ஆய்வு செய்துள்ளது. இதன்போது, ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட ரஷ்ய இராணுவ உயிரிழப்புப் பதிவுகளில் 90 சதவீதமானவை கசிந்த தரவுகளுடன் பொருந்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் உயிரிழந்த 18 முதல் 24 வயதுக்குட்பட்ட ரஷ்யர்களில் 65 சதவீதமானோர் போரில் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில் இந்த எண்ணிக்கை 59 சதவீதமாகக் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், யுக்ரைனின் 10 கிராமங்களைக் கைப்பற்றுவதற்காக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 20 ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த 10 கிராமங்களிலும் போருக்கு முன்னர் மொத்தமாக 12 ஆயிரம் மக்கள் வசித்துள்ளனர்.
அத்துடன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் பாக்முத் நகருக்கு தெற்கே அமைந்துள்ள அந்த்ரிவ்கா என்ற சிறிய கிராமத்தைக் கைப்பற்றுவதற்கான மோதலில் மாத்திரம் 1,122 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். போருக்கு முன்னர் அந்தக் கிராமத்தில் 74 பேர் மட்டுமே வசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் அமைந்துள்ள துவா, புரியாத்தியா உள்ளிட்ட வறிய பிராந்தியங்களைச் சேர்ந்த ஆண்கள், மொஸ்கோ மற்றும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் 20 முதல் 25 மடங்கு அதிகமாகப் போரில் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சர்வதேச ஊடகங்கள் இணைந்து உறுதிப்படுத்திய ரஷ்ய இராணுவ உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 90 ஆயிரத்து 12 ஆகக் காணப்படுகின்றது.
எனினும், பகிரங்கமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இந்த எண்ணிக்கை, உண்மையான உயிரிழப்புகளில் 45 முதல் 55 சதவீதம் வரையானவற்றையே பிரதிபலிப்பதாக இராணுவ நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.




