மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் , 2021ஆம் ஆண்டு முதல் சுமார் இரண்டு வருடங்கள் கடுமையான ஆன்மீகப் போராட்டத்தை எதிர்கொண்டிருந்ததாக அவரது தனிப்பட்ட நாட்குறிப்புகள் அடங்கிய நூல் மூலம் தெரியவந்துள்ளது.
பிசாசின் சோதனைகளுக்கு எதிராகப் போராடியதுடன், கத்தோலிக்க திருச்சபைக்குள் தனக்கிருந்த அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் அவர் உளரீதியான போராட்டங்களை எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாப்பரசர் பிரான்சிஸின் நெருங்கிய உதவியாளரான கர்தினால் விக்டர் பெர்னாண்டஸ், அவரது நாட்குறிப்புகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.
‘The Private Diary of Pope Francis’ எனப் பெயரிடப்பட்டுள்ள 160 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில், 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் அவர் எழுதிய நாட்குறிப்புகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
தனது வாழ்நாளில் மூன்று சந்தர்ப்பங்களில் பிசாசைக் கண்டதாகத் தாம் நம்புவதாக பாப்பரசர் பிரான்சிஸ் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழுதிய நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் ஒரு சம்பவம், அவர் பாப்பரசராக பதவி வகித்த காலத்தில் வத்திக்கான் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது இடம்பெற்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் எழுதிய பதிவில், நரகத்தின் நுழைவாயிலைக் கண்டதாகவும், அதனால் அச்சமடைந்து ஜெபமாலையை கையில் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப இயக்கும் பொம்மலாட்டக்காரராகத் தான் மாறுவதை இறைவன் விரும்பமாட்டார் என்ற ஆழமான உணர்வு தனக்கிருந்ததாகவும் அவர் தனது நாட்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2018ஆம் ஆண்டு சிலி நாட்டுக்கான விஜயத்தின்போது எழுந்த சமூக புரள்வான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் தான் மிகுந்த கவலையடைந்திருந்ததாக அவரது நாட்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போதைய பாப்பரசர் லியோ குறித்தும் அவர் பாராட்டான கருத்துகளைப் பதிவு செய்திருந்ததாக கர்தினால் விக்டர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
1960களுக்குப் பின்னர், ஒரு பாப்பரசரின் தனிப்பட்ட நாட்குறிப்புகள் நூலாக வெளியிடப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
12 ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபைக்குத் தலைமை தாங்கிய பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டவர், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 88ஆவது வயதில் காலமானார்.




