தெற்காசியாவின் முதலாவது நவீன காற்றழுத்தக் கட்டமைப்பிலான மாநாட்டு மண்டபம் (‘Air Dome’), அடுத்த மாத இறுதிக்குள் கொழும்பு துறைமுக நகரில் திறந்து வைக்கப்படவுள்ளதாக CHEC Port City Colombo நிறுவனத்தின் காணி அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதி பொது முகாமையாளருமான ஷலக்க விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட பிரமாண்ட நிகழ்வுகளை நடத்தும் நோக்கில் அமைக்கப்படும் இந்த மையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 4,000 பேர் அமர முடியும்.
டுபாய் உள்ளிட்ட உலகின் முன்னணி மாநாட்டு மையங்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த வசதி உருவாக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுக நகரின் பிரதான அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள நாட்டின் மிகப்பெரிய பல்நோக்கு மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்திற்கான முன்னோடி மற்றும் இடைக்கால வசதியாக இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள நிரந்தர மாநாட்டு மையத்தில் 4,000 பேர் அமரக்கூடிய உள்ளகப் பல்நோக்கு அரங்கமும், 5,000 பேர் வரை கூடக்கூடிய வெளிப்புறப் பகுதியும் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், அதற்கு அருகில் 400 முதல் 450 அறைகளைக் கொண்ட நட்சத்திரத் தரத்திலான வர்த்தக ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




