பிரேசிலின் அமேசன் மழைக்காட்டில் கடந்த 11 நாட்களாக காணாமல் போயிருந்த அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட 74 வயது முதியவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பிரேசிலின் அமாபா மாநிலத்தைச் சேர்ந்த ஜானரினோ பெரெய்ரா டோஸ் சான்டோஸ் என்ற முதியவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
முதலைகள் மற்றும் விஷப்பாம்புகள் வாழும் அமேசன் காட்டில், 11 நாட்களாகப் பழங்களை உட்கொண்டும் இயற்கை நீர்நிலைகளில் இருந்து நீரைப் பருகியும் அவர் உயிர் பிழைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை நிறைவு செய்யத் தயாரான நிலையில், வனத்துறை அதிகாரிகள் தனியான தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கடந்த 20ஆம் திகதி அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
தேடுதல் குழுவினர் காட்டுக்குள் பயணித்தபோது, சுமார் 30 மீற்றர் தொலைவில் முதியவரைக் கண்டதாக வனத்துறை அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மரக்கிளைகள் மற்றும் தாவரப் பகுதிகளைக் கொண்டு தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட சாதனத்தின் உதவியுடன் அவர் காட்டிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டுள்ளார்.
சதுப்பு நிலங்கள் மற்றும் எருமைகள் அதிகம் நடமாடும் பகுதிகளைக் கடந்து அவரைப் பாதுகாப்பாக மீட்பது பெரும் சவாலாக இருந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.







