தெற்காசியாவின் முன்னணி கிறிஸ்மஸ் கொண்டாட்ட சுற்றுலாத் தலமாக கொழும்பை உருவாக்கும் நோக்கில், ‘Colombo Christmas by Shero Presented by Homelands’ எனும் 18 நாட்கள் கொண்ட கிறிஸ்மஸ் விழாவிற்கான ஆரம்ப நிகழ்வு போர்ட் சிட்டி கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
Events by Shero நிறுவனத்தின் எண்ணக்கருவில், போர்ட் சிட்டி கொழும்பின் நிகழ்விட ஒத்துழைப்புடனும், ABC Network நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையுடனும் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
கிறிஸ்மஸ் அலங்காரங்கள், கண்கவர் காட்சியமைப்புகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விற்பனை நிலையங்கள் மற்றும் உணவு, பான வகைகள் எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த விழாவில் இடம்பெறவுள்ளன.
குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் இந்த விழாவை வருடாந்த ஈர்ப்புமிக்க நிகழ்வாக மாற்ற ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளையும், இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்களையும், விடுமுறைக்காகத் தாயகம் திரும்பும் இலங்கையர்களையும் ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த முயற்சியானது கொழும்பின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், உணவகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் தமது விடுமுறைப் பயணத் திட்டங்களில் இந்த விழாவையும் இணைத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய அலங்காரக் கட்டமைப்புகள், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் LED விளக்குகள், கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த முதலாவது கிறிஸ்மஸ் விழாவின் ஊடாக, டிசம்பர் மாத விடுமுறைக் காலத்தில் கொழும்பை முக்கிய சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்துவதுடன், நகரின் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கவும் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.







