சீனாவிற்கு அதிநவீன அமெரிக்க கணினித் தொழில்நுட்பங்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து, தென்கிழக்காசியாவின் நான்கு நாடுகளுக்கான தனது அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) சிப்களின் சில விற்பனைகளை என்விடியா நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தரவு மையங்களை நடத்தும் நிறுவனங்கள் முன்பதிவு செய்திருந்த சிப்களுக்கான விநியோக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல பில்லியன் டொலர் முதலீட்டிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் தென்கிழக்காசிய தரவு மையத் துறையில் இந்தத் தீர்மானம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக என்விடியாவின் அதிநவீன சிப்களை நேரடியாகக் கொள்வனவு செய்ய முடியாத சீன நிறுவனங்கள், தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள தரவு மையங்களிடமிருந்து அவற்றை வாடகைக்கு பெற்று பயன்படுத்தி வருகின்றன.
இந்த நடைமுறையைத் தடுக்க அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் கடந்த வாரம் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.
இதன்படி, சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கணிசமான கணினிச் செயலாக்கத் திறனை வழங்கும் தென்கிழக்காசிய தரவு மையங்கள், என்விடியாவின் அதிநவீன சிப்களைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்காவின் உரிமத்தைப் பெற வேண்டியிருக்கும்.
எனினும், இந்தப் புதிய ஒழுங்குமுறை முன்மொழிவுகள் இன்னும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா அதிநவீன அமெரிக்க சிப்களைக் கொள்வனவு செய்வதைக் கட்டுப்படுத்துவதுடன், வெளிநாடுகள் ஊடாக அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் மட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.







