இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு இடையிலான 12ஆவது கூட்டு இராணுவப் பயிற்சியான ‘மித்ர சக்தி – XII’ நேற்று (26) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
கடந்த நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமான இந்தப் பயிற்சி, மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இதில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 17 அதிகாரிகள் மற்றும் 153 சிப்பாய்களும், இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 19 அதிகாரிகள் மற்றும் 150 சிப்பாய்களும் பங்கேற்றனர். மேலும், பயிற்சிக் கட்டுப்பாடு மற்றும் ஆதரவுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 650க்கும் மேற்பட்டோர் பங்களித்ததுடன், இலங்கை விமானப்படையும் ஆதரவளித்தது.
கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள், வான்வழி ஆதரவு ஒருங்கிணைப்பு, நகர்ப்புற மற்றும் வனப்பகுதிப் போர், நேரடித் துப்பாக்கிச் சூடு, பதுங்கித் தாக்குதல், இராணுவ வாகனத் தொடரணியின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு இராணுவத் தந்திரோபாயப் பயிற்சிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
மேலும், விசேட படையணி பயிற்சி வசதிகளைப் பார்வையிடுதல், போர்ப் பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பல்வேறு செயற்பாட்டுச் சூழல்களைக் கையாள்வதற்கான நடைமுறைப் பயிற்சிகளும் இடம்பெற்றன.
பயிற்சியின் இறுதிக்கட்டமாக, பலப்படுத்தப்பட்ட கிராமம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தும் செயல்விளக்கம் கடந்த நவம்பர் 25ஆம் திகதி மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
இதில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் மற்றும் உதவிப் பாதுகாப்பு இணைப்பாளரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டுப் பயிற்சியானது இரு நாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைத் திறன், தொழில்முறை அறிவு, அனுபவப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராணுவ நட்புறவையும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







