மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19) மரண தண்டனை விதித்துள்ளது.
தேவதாஸ் சுரேஷ் குமார் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான நீண்டகால வழக்கு விசாரணையின் நிறைவில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செங்கலடியில் அமைந்திருந்த EPDP முகாமுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் குழுவொன்றினால் அவர் வேனில் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2008ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் திகதி கடத்தப்பட்ட சுரேஷ் குமார் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது உடலம் புதைக்கப்பட்டு, அந்த இடத்தில் வாழை மரக்கன்று நடப்பட்டிருந்ததாக நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஏறாவூர் காவல்துறையினர், EPDP உறுப்பினர்கள் ஒன்பது பேரைக் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
பின்னர், மேலதிக விசாரணைக்காக 2016ஆம் ஆண்டு இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனும் விசாரணைகளின்போது மீட்கப்பட்டது.
நீண்டகால விசாரணையின் பின்னர், சட்டவிரோதக் கூட்டமாக ஒன்றுகூடியமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எட்டுப் பிரதிவாதிகளும் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.
இதற்கமைய, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், சட்டவிரோதக் கூட்டத்தில் கொலை செய்வதைப் பொதுவான நோக்கமாகக் கொண்டு உறுப்பினர்களாக இருந்தமை தொடர்பில் குற்றவியல் சட்டக்கோவையின் 140ஆவது பிரிவின் கீழ் ஆறு மாத எளிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வழக்கின் ஒன்பதாவது பிரதிவாதி அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தண்டனை விதிக்கப்பட்ட எட்டுப் பேரும் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.



