இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 31 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 38 சதவீதமானோருக்குத் தமக்கு அந்நோய் இருப்பது குறித்த விழிப்புணர்வு இல்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அண்மைய மருத்துவப் பரிசோதனைகளின் பிரகாரம், பரிசோதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதமானோருக்கு நீரிழிவுக்கு முந்தைய நிலையும் (Prediabetes), 20 சதவீதமானோருக்கு நீரிழிவு நோயும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உடல் பருமனானவர்களுக்கு மாத்திரமன்றி, சாதாரண உடல் எடை கொண்டவர்களுக்கும் நீரிழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக இலங்கை நீரிழிவு சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக சோர்வு, மங்கலான பார்வை மற்றும் காயங்கள் ஆறுவதில் தாமதம் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
எந்தவித அறிகுறிகளும் இன்றி இந்தநோய் ஏற்படக்கூடும் என்பதால், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உரிய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவுப் பழக்கவழக்கங்களில் ஆரோக்கியமான மாற்றங்களை மேற்கொள்வது, தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சீரான உறக்கத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனச்சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



