தென்கொரியாவின் ஹ்வாசோங் (Hwaseong) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் தென்கொரிய காவல்துறையினர் நவம்பர் 27ஆம் திகதி சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கான சட்டரீதியான நடைமுறைகளை முன்னெடுப்பதற்காக, தென்கொரிய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தூதரகத்தின் தூதரகப் பிரிவு ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றது.
அத்துடன், உயிரிழந்த இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த பின்னரே தென்கொரியாவுக்குச் சென்றிருந்ததாக பதில் வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான தூதரக மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







