யுக்ரைன் தலைநகர் கீவ்விற்கு அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் இடிபாடுகளுக்குள் சுமார் 14 மணிநேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுவன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கீவ் பிராந்தியத்தின் டைமர் கிராமத்தில் நேற்று முன்தினம் (22) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன.
மீட்கப்பட்ட சிறுவன் சீரான நிலையில் இருப்பதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் யுக்ரைன் அதிகாரிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கீவ் பிராந்தியத்தின் விஷ்னேவ் பகுதியில் உள்ள கடையொன்றின் மீது நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றபோது மக்கள் உறக்கத்தில் இருந்ததாக யுக்ரைன் உள்துறை அமைச்சர் இவான் வைஹெவ்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், வெடிபொருள் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மீட்புப் பணிகளுக்காக 130 இற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரையான நிலவரப்படி, யுக்ரைனின் 10 பிராந்தியங்களில் 70 இற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




