அம்மா உணவகத்தில் சாப்பிட வந்த வாலிபர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர். பெரம்பூர் தீட்டி தோட்டம் 1வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (19). இவரது தாய், தந்தையர் இறந்து விட்டனர். இவர் தனது பாட்டி கவுரி (67) என்பவருடன் வசித்து வருகிறார். ராஜேஷ் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ராஜேஷ் அடிக்கடி தீட்டி தோட்டம் ஒன்றாவது தெருவில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு செல்லும் போது உணவு உடனடியாக வேண்டும், சூடாக வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு ராஜேஷ் அம்மா உணவகத்திற்கு சென்று உணவு கேட்டுள்ளார். அவர்கள் உணவை தயார் செய்து கொண்டிருந்த போது உடனடியாக உணவு வேண்டும் என கூறி உணவக ஊழியர் உதயபானு (50) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது கொதிக்கும் சாம்பாரை கரண்டியில் எடுத்து உதயபானு, ராஜேஷ் முகத்தில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் காயம் அடைந்த ராஜேஷை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 6 சதவீத தீ காயங்களுடன் ராஜேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று முன்தினம் திருவிக நகர் பாஷியம் தெரு பகுதியைச் சேர்ந்த அம்மா உணவக ஊழியர் உதயபானுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




