அமெரிக்காவில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரிய வகை மின்மினிப் பூச்சி இனம், 43 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
‘சிமிலர் பயர்பிளை’ (Similar Firefly) எனப்படும் இந்த மின்மினிப் பூச்சிகள், கடந்த 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் தென்படவில்லை. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு வர்ஜீனியா மற்றும் டெலாவேர் ஆகிய இரண்டு மாநிலங்களில் இவை மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முதலில் வர்ஜீனியா மாநிலத்தின் ஆஷ்பர்ன் பகுதியில் குடிமக்கள் அறிவியல் ஆய்வாளர் ஒருவரால் இந்தப் பூச்சி அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து, டெலாவேர் மாநிலத்தில் உள்ள பிராண்டிவைன் க்ரீக் மாநிலப் பூங்காவில், அந்த பல்கலைக்கழக ஆய்வாளர் கிறிஸ்டோபர் ஹெக்சர் சுமார் 8 முதல் 12 மின்மினிப் பூச்சிகளைக் கண்டறிந்துள்ளார்.
இரவு நேரத்தில் இவை வெளியிடும் தனித்துவமான அம்பர் நிற ஒளியே அவற்றைக் கண்டறிய உதவியுள்ளது. 10 முதல் 20 முறை வேகமாக ஒளிர்ந்துவிட்டு சிறிது இடைவெளி விடும் தன்மையை ஆய்வாளர் அவதானித்துள்ளார்.
பின்னர் நுண்ணோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 43 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட அதே இனத்தைச் சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நகரமயமாக்கல் மற்றும் செயற்கை ஒளி மாசுபாடு காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் காணாமல் போனதாகக் கருதப்படும் சுமார் 28 வகை மின்மினிப் பூச்சி இனங்களைத் தேடும் ஆய்வுகளுக்கும் இந்தக் கண்டுபிடிப்பு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




