கடுமையான பகிடிவதைச் சம்பவத்திற்கு முகங்கொடுத்தமையால், சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தின் இரண்டாம் வருட மாணவனான சரித் தில்ஷான் தயானந்த, கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (20) திகதி நிர்ணயித்துள்ளது.
இதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, மனுதாரர் தரப்பான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயிர்மாய்ப்புச் சம்பவத்தின் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறும், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களுக்குள் பகிடிவதையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழகம், அதன் உபவேந்தர் உள்ளிட்ட ஆட்சிச் சபை உறுப்பினர்கள், உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட 69 பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.




