சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெற்ற எபெக் எனப்படும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டின் ஓரத்தில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் வரலாற்றில் முதல் முறையாக முத்தரப்புச் சந்திப்பொன்றில் ஈடுபட்டு உலக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளனர்.
உலகளாவிய அமைதி, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் எரிசக்தி விநியோக உறுதிப்பாடு குறித்து இம்மூன்று அணுசக்தி வல்லரசுகளும் வெளியிட்டுள்ள ‘அமைதிப் பிரகடனம்’ சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, கொழும்பிலுள்ள சீனத் தூதரகமும், ரஷ்யத் தூதரகமும் இச்சந்திப்பை வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாக வர்ணித்து, எபெக் மாநாட்டின் தீர்மானங்கள் மற்றும் முத்தரப்பு உடன்பாடுகள் குறித்த தகவல்களை இலங்கையின் சமூக மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றன.
இருப்பினும், சர்வதேச அளவில் இவ்வளவு பாரிய புவிசார் அரசியல் நகர்வுகள் இடம்பெற்று வரும் சூழலில், இலங்கை அரசாங்கமோ, உயர் அரசியல் தலைவர்களோ அல்லது பீஜிங்கில் உள்ள இலங்கை இராஜதந்திரிகளோ இது குறித்து எந்தவொரு நேரடிக் கருத்தையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் இந்தப் போக்கு, இலங்கையின் பாரம்பரிய அணிசேரா மற்றும் ‘மூலோபாய சுயாட்சி’ (Strategic Autonomy) கொண்ட வெளியுறவுக் கொள்கையின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.
வல்லரசுகளின் அரசியல் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாத அதேவேளை, பிராந்தியப் பொருளாதார நலன்களை அடைந்து கொள்வதில் இலங்கை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக, இலங்கை அங்கத்துவம் வகிக்காத எபெக் மாநாட்டு விவகாரங்களில் தலையிடாமல், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் (Regional Comprehensive Economic Partnership – RCEP) இணைவதற்கான இராஜதந்திர முயற்சிகளை இலங்கை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பேணிக்கொண்டே சர்வதேச வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை இலங்கை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பணிகளில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளதுடன், 2027 பாதீட்டு திட்டத்திலும் பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், மணிலாவில் நடைபெற்ற குவாட் (Quad) உச்சிமாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ‘சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்’ (FOIP) கொள்கையை வலியுறுத்தியுள்ளன.
சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தோ-பசிபிக் வியூகத்திற்கும், சீனா முன்னிலைப்படுத்தும் ஆசிய-பசிபிக் கொள்கைக்கும் இடையிலான முரண்பாடுகளில் இலங்கை எந்தவொரு பக்கமும் சாராமல் நடுநிலை வகிக்கிறது.
குவாட் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து வெளிப்படையான கருத்துக்களைத் தவிர்த்து வரும் கொழும்பு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அமைதி, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மீன்பிடித் தடுப்பு உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களை மட்டுமே தனது முதன்மைக் கொள்கையாக வலியுறுத்தி வருகிறது.
பொருளாதார மீட்சி மற்றும் கடன் மறுசீரமைப்புச் சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்காவின் ஒத்துழைப்பும், அயல்நாடான இந்தியாவின் ஆதரவும், பாரிய முதலீட்டாளரான சீனாவின் பங்களிப்பும் ஒருசேரத் தேவைப்படுகின்றன.
எனவே, ஷென்சென் மாநாட்டில் வல்லரசுகள் கைகோர்த்தாலும் சரி அல்லது மணிலாவில் குவாட் நாடுகள் வியூகம் வகுத்தாலும் சரி, எந்தவொரு வல்லரசு அணிக்குள்ளும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், அனைத்துத் தரப்புடனும் இணக்கமான பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதையே இலங்கை தனது பாதுகாப்பான பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளது.




