உலகளவில் பிரபலமான செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் சேவையான Claude ஐ உருவாக்கிய அமெரிக்காவின் Anthropic நிறுவனம், சுமார் 1.4 ரில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பீட்டுடன் பங்குச் சந்தையில் அறிமுகமாகத் தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, நிறுவனத்தின் பங்குகள் நியூயோர்க்கில் உள்ள Nasdaq பங்குச் சந்தையில் வர்த்தகத்துக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Anthropic நிறுவனம் தனது ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டில் (IPO) ஒரு பங்கின் விலையை 83 அமெரிக்க டொலர்களாக நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் ஒரு பங்கின் விலை 70 முதல் 78 டொலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்த அதிகளவிலான கேள்வி காரணமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் 81.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிறுவனம் திரட்டியுள்ளதாகவும், இது வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், கடந்த ஜூன் மாதம் எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனம் பங்குச் சந்தை வெளியீட்டின் ஊடாகத் திரட்டிய சுமார் 75 பில்லியன் டொலர் தொகையையும் Anthropic நிறுவனம் கடந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், தனியார் பங்கு முதலீடுகள் மூலம் கூடுதலாக 26 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
OpenAI நிறுவனத்திலிருந்து விலகிய டாரியோ அமோடெய் மற்றும் டேனிலா அமோடெய் உள்ளிட்ட குழுவினரால் 2021ஆம் ஆண்டு Anthropic நிறுவனம் நிறுவப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாக Anthropic அறியப்படுகிறது.
எனினும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அதிக செலவுகள், தரவு மையங்களை அமைத்தல், கணினிச் சில்லுகளுக்கான அதிகரித்து வரும் தேவை மற்றும் நிறுவனங்களின் எதிர்கால இலாபம் தொடர்பாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இத்தகைய சூழலில், Anthropic நிறுவனத்தின் பங்குச் சந்தைப் பிரவேசம், செயற்கை நுண்ணறிவுத் துறையின் எதிர்காலம் மற்றும் அத்துறையில் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான முக்கியமான பரிசோதனையாக அமையும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




