
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க அரசியல் தலைவர்களைப் படுகொலை செய்யச் சதி செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த 48 வயதான ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தூண்டுதலின் பேரில் அவர் கூலிப்படையினரைப் பணியமர்த்தி இந்தச் சதியை முன்னெடுக்க முயன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ட்ரம்ப் மட்டுமன்றி, முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே ஆகியோரும் இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தப் படுகொலைச் சதி திட்டமிடப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

