Wednesday, 18 November 2026
கனடா வானிலை
14°C
ரொறன்ரோ
தெளிவான வானம்
  • உணர்வு 10°
  • ஈரப்பதம் 55%
  • காற்று 16 km/h
  • ஸ்காபரோ 15°
  • மார்க்கம் 15°
  • பிரம்டன் 14°
  • மிசிசாகா 15°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.00%
  • EUR 1.57 ▼ 0.05%
  • GBP 1.89 ▲ 0.10%
  • CHF 1.70 ▼ 0.06%
  • AUD 0.96 ▼ 0.12%
  • 1 CAD → LKR 232.81 ▲ 0.05%
  • 1 CAD → INR 65.39 ▼ 0.47%
  • AED 0.39 ▼ 0.00%
புதுப்பிப்பு: 2026-11-18 17:25
அண்மைச் செய்திகள்
டிசம்பர் 11 முதல் சனியின் நேரடி பயணம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண் தந்தைக்கு சவப்பெட்டி செய்யும் 7 வயது சிறுவன் குகைக்குள் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் செயற்கை நுண்ணறிவு மாயாஜாலம்: எச்சரிக்கை! யாழில் பரபரப்பு! பொலிஸாரை கண்டதும் கழுத்தை அறுத்து தப்பிக்க முயன்ற இளைஞர் கனடாவில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது! கனடாவில் பிரபல உணவு மற்றும் பானப் பொருட்கள் திரும்பப் பெறல்! கனடாவின் கியூபெக் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் கைப்பேசித் தடை சஷி வீரவங்சவுக்கு எதிரான சிறைத்தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
விளம்பரம்விளம்பரம்
உலக செய்திகள்

10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் குறித்து அமெரிக்கா புதிய விசாரணை

அமெரிக்காவின் வாகனப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகாரிகள், 10 இலட்சத்திற்கும் அதிகமான ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் புதிய விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

வாகனங்கள் தானாகவே அணைக்கப்பட்டதன் பின்னர், அவற்றின் இயந்திரங்கள் மீண்டும் இயங்கத் தவறியதாக நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குரிய குறிப்பிட்ட சில ஹோண்டா ஒடிஸி, பாஸ்போர்ட், ரிட்ஜ்லைன், பைலட் மற்றும் அக்யூரா எம்.டி.எக்ஸ் ஆகிய மாதிரி வாகனங்களின் தானியங்கி ‘ஸ்டாப்-ஸ்டார்ட்’ தொழில்நுட்பம் தொடர்பில் சுமார் 700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில், வாகனம் முழுமையாக நிறுத்தப்படும்போது இயந்திரத்தைத் தானாகவே அணைத்து, சாரதி பிரேக் பெடலிலிருந்து காலை எடுக்கும்போது மீண்டும் இயங்க வைக்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எனினும், இவ்வாறு அணைக்கப்பட்ட இயந்திரங்கள் மீண்டும் இயங்கத் தவறியதால், வாகனங்கள் போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் நின்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நூற்றுக்கணக்கான சாரதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

 2022 ஆம் ஆண்டில் சுமார் 22 இலட்சம் ஹோண்டா வாகனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே இந்தப் புதிய விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. 

4 விபத்துக்கள் மற்றும் 2 காயங்கள் உள்ளடங்கலாக 1,300-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதை அடுத்து, அந்த முந்தைய விசாரணை கடந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டிருந்தது.

தற்போதைய புதிய விசாரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள வாகனங்களில் ஒரே மாதிரியான அறிகுறிகள் தென்பட்டாலும், இயந்திரக் கோளாறுக்கான அடிப்படைக் காரணங்கள் வேறுபட்டவையாகக் காணப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. 

இந்தப் புதிய விசாரணை குறித்துத் தாம் அறிந்துள்ளதாகவும், அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் ஹோண்டா நிறுவனம் வெளியிட்ட சேவை அறிக்கைகளில், வாகனங்களின் மென்பொருளைப் புதுப்பிக்குமாறும், தேவைப்படின் ஸ்டார்டர் உதிரிப்பாகங்களை மாற்றுமாறும் பரிந்துரைத்திருந்தது. அத்துடன், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு வரம்பற்ற மைலேஜ் வசதியுடன் 10 ஆண்டுகளுக்கு உத்தரவாதக் காலத்தையும் அந்த நிறுவனம் நீடித்திருந்தது. 

பவர் ஸ்டீயரிங் செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய வேறொரு மென்பொருள் கோளாறு காரணமாக, அமெரிக்காவிலுள்ள 6 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை ஹோண்டா நிறுவனம் மீளழைத்து சில நாட்களே கடந்துள்ள நிலையில் இந்தப் புதிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை வாகனங்களை மீளழைப்பதற்கான உத்தரவல்ல எனவும், மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமா என்பதை அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.