வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, போர்க்களங்களில் பயன்படுத்தக்கூடிய தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பல்வேறு துறைகளிலும் அதிகளவில் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தித் திறனைத் திட்டமிட்ட வகையில் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொரியாவுடனான எல்லைப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, வடகொரியாவின் அணு ஆயுதத் திறனை அளவிலும் தரத்திலும் மேம்படுத்துவது அவசியம் என கிம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடகொரியா அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு என்ற அந்தஸ்தை ஒருபோதும் கைவிடாது எனவும், அதனை மறுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் பிரகடனமாகக் கருதப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சீனாவில் நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது கிம் ஜாங் உன்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், எனினும் இரு தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







