
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்த தமிழக முதலமைச்சர் விஜய், அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளை மட்டும் ஒரு வார காலத்துக்கு நடத்த அனுமதி வழங்கியிருந்தார்.
எனினும், ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘இராமாயணா’ ஆகிய திரைப்படங்கள் பல இடங்களில் அதிகாலை 6 மணி காட்சிகளைத் தவிர்த்திருந்தன. இந்நிலையில், இந்த வாரம் வெளியாகவுள்ள தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்திற்கும் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மாத்திரமே அதிகாலை 6 மணி காட்சிக்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓம் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நேற்று மாலை இந்தத் திரைப்படத்துக்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்த படக்குழு, உடனடியாக டிக்கெட் முன்பதிவையும் ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து தனுஷின் ரசிகர்கள் திரைப்படத்தைக் காண ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் திரையரங்குகளில் மாத்திரம் ‘ஓம்’ திரைப்படத்திற்கான அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சில தனித்திரை திரையரங்குகளிலும் முதல் நாளுக்கான அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
எனினும், பெரும்பாலான பிவிஆர் (PVR) பல்திரை திரையரங்குகளில் காலை 8 மணி மற்றும் 9 மணி காட்சிகளுக்கான முன்பதிவுகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல திரையரங்குகளில் இன்று டிக்கெட் முன்பதிவு ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சில திரையரங்குகளைத் தவிர ஏனைய இடங்களில் அதிகாலை 6 மணி காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகவில்லை எனக் கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

