Sunday, 22 November 2026
கனடா வானிலை
6°C
ரொறன்ரோ
பகுதி மேகமூட்டம்
  • உணர்வு 4°
  • ஈரப்பதம் 96%
  • காற்று 8 km/h
  • ஸ்காபரோ 7°
  • மார்க்கம் 8°
  • பிரம்டன் 7°
  • மிசிசாகா 5°

கனடாவின் தமிழ்க் குரல் – தமிழ் செய்திப் பத்திரிகை

நாணய மாற்று விகிதம் CAD
  • USD 1.43 ▲ 0.06%
  • EUR 1.57 ▼ 0.01%
  • GBP 1.88 ▼ 0.09%
  • CHF 1.71 ▲ 0.40%
  • AUD 0.95 ▼ 0.44%
  • 1 CAD → LKR 232.22 ▼ 0.03%
  • 1 CAD → INR 64.82 ▼ 0.54%
  • AED 0.39 ▲ 0.06%
புதுப்பிப்பு: 2026-11-22 13:31
அண்மைச் செய்திகள்
செயற்கை நுண்ணறிவு, போர் விமான இயக்கத்திலும் ஆதிக்கம் செலுத்த உள்ளது-பிரித்தானியாவின் RAF வான்படை தலைமை மார்ஷல் கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் தலைமுடி 4,000 டொலருக்கு ஏலம் கனடாவில் திருடப்பட்ட 37 வாகனங்களுடன் சந்தேகநபர்கள் கைது கனடாவில் 2 இந்திய வம்சாவளி இளைஞர்கள் சுட்டுக் கொலை அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் மணிப்பூரில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் படகு விபத்து – உயிரிழப்புகள் 24 ஆக அதிகரிப்பு சைபர் நிதி மோசடிகள் – நாட்டுக்கு வந்த FBI குழுவின் விஜயம் நிறைவு! பிறந்தநாள் பலன்கள்
விளம்பரம்விளம்பரம்
ஆசிரியர் தலையங்கம்

கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ்

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) முதல், நாம் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன் ஆப்ஸ் வரை அத்தனை நவீன தொழில்நுட்பத்திற்கும் முதன்மைக் காரணகர்த்தா யார் தெரியுமா?

Computer என்பதே முழுமையாக வடிவமைக்கப்படாத 19-ஆம் நூற்றாண்டிலேயே, அதற்குள் இயங்கப்போகும் Software எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து, உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமை எழுதியது ஒரு பெண் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அவர்தான், கணினி உலகின் தாய் என்று போற்றப்படும் அடா லவ்லேஸ் (Ada Lovelace)!

1815-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் இலண்டன் நகரில், புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் லார்ட் பைரனுக்கும், கணித மேதை அன்னா இசபெல்லாவிற்கும் மகளாகப் பிறந்தார் அகஸ்டா அடா பைரன்.

அடா பிறந்த சில வாரங்களிலேயே பெற்றோர் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு, தன் வாழ்நாளில் ஒரு முறைகூடத் தன் தந்தையை நேரில் பார்க்கும் வாய்ப்பு அடாவிற்குக் கிடைக்கவில்லை.

தந்தையைப் பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என்ற தீராத ஏக்கமும் ஆசையும் அடாவின் மனதில் இருந்தது; ஆனால், தாயின் கடுமையான கட்டுப்பாடுகளால் அவரால் தன் தந்தையைச் சந்திக்கவே முடியாமல் போனது.

தந்தையைப் போலத் தன் மகளும் உணர்ச்சிவசப்படும் கவிஞராக மாறிவிடக் கூடாது என்பதற்காக, சிறுவயது முதலே அடாவிற்குக் கணிதத்தையும், அறிவியலையும் தாய் கற்றுக் கொடுத்தார். ஆனால், அடாவின் இரத்தத்தில் கவிதையும் கணிதமும் ஒன்றாகக் கலந்திருந்தன.

கணிதத்தை வெறும் எண்களாகப் பார்க்காமல், அதை ஒரு கவிதையாகவும், கற்பனை உலகமாகவும் பார்த்தார் அடா.

சிறுவயதில் கடுமையான உடல்நலக் குறைபாடுகளால் படுத்த படுக்கையாகக் கிடந்தபோதும், அவரது கற்பனைத் திறன் முடங்கிப் போகவில்லை. தனது 12-வது வயதிலேயே பறவைகளின் உடற்கூறியலை ஆராய்ந்து, மனிதர்கள் பறப்பதற்கான இறக்கைகளை வடிவமைக்கும் ‘ஃப்ளையாலஜி’ (Flyology) என்ற புத்தகத்தை எழுதினார்.

அடாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, 1833-ஆம் ஆண்டு கணித மேதை சார்லஸ் பாபேஜ் உடனான சந்திப்பு.
‘கணினியின் தந்தை’ என்று அழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ், அப்போது ‘அனலிட்டிக்கல் என்ஜின்’ (Analytical Engine) எனப்படும் உலகின் முதல் இயந்திரக் கணினியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். அந்த இயந்திரம் வெறும் கூட்டல், கழித்தல் கணக்குகளை மட்டுமே போடும் என்று பாபேஜ் உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், அடாவின் தீர்க்கதரிசனப் பார்வை அதையும் தாண்டிச் சென்றது. இந்த இயந்திரத்திற்கு வெறும் எண்களைத் தாண்டி, எழுத்துக்கள், இசை, ஓவியம் என எதையும் உருவாக்கும் சக்தி இருக்கிறது என்பதை அன்றே கணித்தார் அடா! இன்று நாம் பார்க்கும் Generative AI-க்கு அன்றே வித்திட்டது இவரது இந்தக் கற்பனைதான்.

1843-ஆம் ஆண்டு, பாபேஜின் இயந்திரம் குறித்து இத்தாலியப் பொறியாளர் ஒருவர் எழுதிய கட்டுரையை அடா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்போடு, அடா தனியாகச் சேர்த்த விரிவான குறிப்புகள் மூலக் கட்டுரையை விட மூன்று மடங்கு பெரியதாக இருந்தன.

அந்தக் குறிப்புகளில் ‘Note G’ என்ற பகுதியில், பெர்னௌலி எண்களைக் (Bernoulli numbers) கணக்கிடுவதற்கான ஒரு படிப்படியான வழிமுறையை (Algorithm) அடா எழுதியிருந்தார். அதுதான் உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராம்!

கணினித் திரைகள் தோன்றுவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு காகிதத்தில் உலகின் முதல் மென்பொருளை எழுதி சரித்திரம் படைத்தார் அடா லவ்லேஸ்.

தனது தந்தை இறந்த அதே 36-வது வயதில், 1852-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த அடா லவ்லேஸ், ஒரு உருக்கமான இறுதி ஆசையை முன்வைத்தார்.

வாழ்நாள் முழுவதும் பார்க்க முடியாமல் ஏங்கிய தன் தந்தை லார்ட் பைரனின் கல்லறைக்கு அருகிலேயே, தன் உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே அது!

அவரது இறுதி ஆசைப்படியே, இங்கிலாந்தின் ஹக்னல் தேவாலயத்தில் அவரது தந்தையின் உடலுக்கு அருகிலேயே அடாவும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அவர் இறந்து சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே, நவீன கணினி யுகம் பிறந்தபோது, அடா எழுதிய குறிப்புகளின் மதிப்பை உலகம் உணர்ந்து கொண்டாடியது.

அவரது நினைவாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உருவாக்கிய கணினி மொழிக்கு ‘Ada’ என்று பெயரிட்டு கௌரவித்தது.

கணிதத்தையும் கற்பனையையும் இணைத்து, இன்றைய AI மற்றும் டிஜிட்டல் உலகிற்கு முதல் விதையை விதைத்த அந்தப் பெண்மணியின் அறிவு, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மென்பொருளிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.