ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. பாரசீக வளைகுடாவிலிருந்து வெளியேறிய இரண்டு கப்பல்கள் தனித்தனியாக ஏவுகணை,தாக்குதலுக்கு உள்ளானதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஹோர்முஸ் ஜலசந்தியின் கிழக்குப் பகுதியில் ஈரானின் அனுமதியின்றி செல்ல முயன்ற ஒரு கப்பல் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்ததாக ஈரான் புரட்சிகர காவல் படை தெரிவித்தது. இதில், சிக்கிய கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது, அதில் பயணித்த மாலுமிகளின் நிலை குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு திரவ எரிபொருள் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட புதிய இரட்டை ஏவுகணை லாஞ்சரை ஈரான் தனது ஏவுகணை நகரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஈரான் ராணுவம் இதற்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு திட எரிபொருள் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவும் லாஞ்சர்களை பயன்படுத்தி வந்தது. தற்போது முதன்முறையாக திரவ எரிபொருள் கொண்ட இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சுமந்து சென்று ஏவும் வகையில் புதிய லாஞ்சர்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
திரவ எரிபொருள் ஏவுகணைகளை செங்குத்தாக ஏவ முடியும் என்பதுடன், எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டிச் செல்ல உதவும் எனக் கூறப்படுகிறது




