அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்து, விலைவாசி அதிகரிப்பதை கட்டுப்படுத்த மத்திய வங்கி 0.25 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அதிபர் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், குறைவான வட்டி விகிதம் இருந்தால் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக அதிகரிக்கும் என்பதற்கு உதாரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சியை சுட்டிக் காட்டி புகழ்ந்துள்ளார்.
அதிபர் டிரம்ப் கூறியதாவது:
அமெரிக்க பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தும் போதெல்லாம், மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏதாவது ஒரு காரணத்தை கூறுகிறார்கள். இந்த நடவடிக்கை நாட்டை அழித்து வருகிறது. நான் வங்கித் தலைவரை குறை கூறவில்லை. ஆனால் அந்த அமைப்பின் உண்மையை பேசுகிறேன். அது அரசியல் ரீதியாக செயல்படுகிறது.
அவர்கள் மட்டும் குறைவான வட்டி விகிதத்தை வைத்திருந்தால், அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி வெறும் 4 சதவீதமாக இருந்திருக்காது. 15 முதல் 20 சதவீதமாக இருந்திருக்கும். இந்தியாவைப் பாருங்கள். அவர்கள் குறைவான வட்டி விகிதத்தை கொண்டிருக்கிறார்கள். அதனால் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். அதே போல நாமும் செய்தால் நம்மால் 14, 15 சதவீதம் ஏன் 20 சதவீத ஜிடிபி வளர்ச்சியை கூட கொண்டிருக்க முடியும். எனவே நாமும் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் சூட் நேற்று தனது எக்ஸ் பதிவில், டிரம்ப் பேச்சை குறிப்பிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். ஆஷிஷ் சூட் தனது பதிவில், ‘‘இந்தியாவின் வளர்ச்சியை உலகமே அங்கீகரிக்கும் போது, எதிர்க்கட்சி தலைவர் கண்ணை திறந்து அதை பார்க்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.




