சமையலில் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் உப்பு, பொதுவாக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். ஆனால், தென்கொரியாவில் தயாரிக்கப்படும் ஒரு வகை உப்பு, உலகின் மிக விலையுயர்ந்த உப்பு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
‘ஜுக்யோம்’ (Jukyeom) என அழைக்கப்படும் இந்த மூங்கில் உப்பு, அதன் தனித்துவமான தயாரிப்பு முறையாலும் நீண்ட பாரம்பரியத்தாலும் பிரபலமடைந்துள்ளது.
நெருப்பில் உருவாகும் பாரம்பரிய உப்பு
இந்த உப்பு, வழக்கமான கடல் உப்பைப் போன்று நேரடியாகப் பெறப்படுவதில்லை. மாறாக, கடல் உப்பை மூங்கில் தண்டுகளுக்குள் நிரப்பி, கனிமங்கள் நிறைந்த களிமண்ணால் மூடி, பைன் மர விறகுகளைப் பயன்படுத்தி அதிக வெப்பத்தில் வறுத்துத் தயாரிக்கப்படுகிறது.
இந்தச் செயல்முறை பல முறை மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, ஒன்பது முறை வறுக்கப்படும் முறையில் தயாரிக்கப்படும் உப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் வறுக்கப்படும்போது உப்பின் நிறம் மற்றும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் உப்பில் உள்ள சில அசுத்தங்கள் நீக்கப்பட்டு, மூங்கில் மற்றும் களிமண்ணிலிருந்து சில கனிமங்கள் சேர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏன் இவ்வளவு விலை?
இந்த உப்பைத் தயாரிப்பதற்குத் தேவைப்படும் நீண்ட நேரம், அதிக உழைப்பு மற்றும் சிக்கலான பாரம்பரியச் செயல்முறையே அதன் அதிக விலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சர்வதேசச் சந்தையில் ஒரு கிலோகிராம் மூங்கில் உப்பின் விலை சுமார் 347 அமெரிக்க டொலர்கள் வரை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ஒரு கிலோகிராமுக்கு சுமார் 30,000 இந்திய ரூபாய் எனக் குறிப்பிடப்படுகிறது.
மருத்துவக் குணங்கள் உள்ளனவா?
கொரிய பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்த மூங்கில் உப்பு பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் செரிமானத்திற்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கல்சியம் போன்ற தாதுக்கள் இதில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இத்தகைய மருத்துவ நன்மைகளை உறுதிப்படுத்துவதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இதுவரை இல்லை. எனவே, இதனை மருத்துவப் பொருளாகக் கருதிப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
இந்த மூங்கில் உப்பு வழக்கமான சமையல் உப்பைப் போல அதிகளவில் பயன்படுத்தப்படுவதில்லை. உணவு தயாரான பின்னர் சிறிய அளவில் தூவுவதற்கும், சில பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
சாதாரண சமையல் உப்பைப் போலவே இதிலும் சோடியம் காணப்படுவதால், அதிகளவில் உட்கொள்வதைத் தவிர்ப்பது அவசியமாகும்.




