அமெரிக்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட தொடர் தொழில்நுட்ப முடக்கங்களால் வானூர்திப் போக்குவரத்து, வங்கிச் சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு வலையமைப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் தேசிய சைபர் பாதுகாப்புப் பணிப்பாளர் ஷான் கெயின்கிராஸ் (Sean Cairncross) பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து, பென்டகனின் தலைமை தகவல் அதிகாரியாகப் பணியாற்றிய கிர்ஸ்டன் டேவிஸை (Kirsten Davies) புதிய தேசிய சைபர் பாதுகாப்புப் பணிப்பாளராக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
எனினும், அவர் தற்காலிக அடிப்படையிலேயே இப்பதவியைப் பொறுப்பேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சேவை முடக்கங்கள் காரணமாக வானூர்திப் போக்குவரத்து, தகவல் தொடர்பு, இணையவழி வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டதுடன், தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் (NSA) சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சைபர் தாக்குதல் குறித்த எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் 2025ஆம் ஆண்டு சைபர் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான பிரதான ஆலோசகராக ஷான் கெயின்கிராஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் செனட் சபையின் ஒப்புதலையும் அவர் பெற்றிருந்தார்.
ட்ரம்பின் முதலாவது ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்த அவர், குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவிலும் நிர்வாகியாகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




