
நாசாவின் TESS விண்வெளித் தொலைநோக்கி மூலம் சுமார் ஏழு ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்டு வந்த TOI-2535 b என்ற பிரம்மாண்டக் கோள், தற்போது பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோள் காணாமல் போனது போன்று தோன்றினாலும், அது உண்மையில் அழிந்துவிடவில்லை. அதன் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட மாற்றமே இதற்குக் காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
குறித்த கோளுக்கு அருகில் இதுவரை நேரடியாகக் கண்டறியப்படாத மற்றொரு கோளின் ஈர்ப்பு விசை செயல்படுவதாகவும், அதன் தாக்கத்தால் TOI-2535 b கோளின் சுற்றுப்பாதை சாய்ந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, ஒரு கோள் தனது நட்சத்திரத்தைக் கடந்து செல்லும்போது, அதன் நட்சத்திரத்தின் ஒளியில் ஏற்படும் சிறிய மாற்றத்தைப் பயன்படுத்தி தொலைநோக்கிகள் மூலம் அதைக் கண்டறிய முடியும். ஆனால், TOI-2535 b கோளின் சுற்றுப்பாதை தற்போது பூமியிலிருந்து பார்க்கும் கோணத்தில் மாறியுள்ளதால், அது தனது நட்சத்திரத்தைக் கடந்து செல்லும் நிகழ்வை அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்தக் கோள் பூமியிலிருந்து காணாமல் போனது போன்று தோன்றுகிறது. எனினும், அது தொடர்ந்து தனது நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.
மேலும், சுற்றுப்பாதையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக, அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்குப் பின்னரே அந்தக் கோள் மீண்டும் பூமியிலிருந்து அவதானிக்கக்கூடிய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு, கோள்களின் சுற்றுப்பாதைகளில் அருகிலுள்ள பிற கோள்களின் ஈர்ப்பு விசை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.




