கனடா பிரதமர் மார்க் கார்னியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், 31 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜேமி டகோஸ்டா என்ற குறித்த நபர், பிரதமர் மார்க் கார்னிக்கு மிரட்டல் விடுத்ததுடன், கல்கரி நகரிலுள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் அதன் பணியாளர்களுக்கும் எதிராகப் பணம் பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் 5,000 டொலர்களுக்கும் அதிகமான சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறப்பு அரச சட்டத்தரணி வில்லியம் டிரான் இந்த வழக்குகளை நெறிப்படுத்தினார்.
2026 ஜூலை மாதம் யூடியூபில் வெளியிடப்பட்ட இரண்டு காணொளிகளில், கனடியர்கள் ஒட்டாவாவிற்குச் சென்று பிரதமர் மார்க் கார்னி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துமாறு டகோஸ்டா தூண்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர். இதற்கு முன்னதாக, 2025 ஒக்டோபர் முதல் 2026 ஜூலை வரையான காலப்பகுதியில், கல்கரியிலுள்ள டயர் விற்பனை நிலையம் தனது வாகனத்தைச் சேதப்படுத்திவிட்டதாகக் கருதிய டகோஸ்டா, அந்நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
கடையின் கண்ணாடிகளை அவர் அடித்து நொறுக்கும் சிசிடிவி காணொளியும் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. பணம் தராவிட்டால் பணியாளர்களுக்கு உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாகவும் அவர் யூடியூப் காணொளிகள் மூலம் மிரட்டியிருந்தார்.
டகோஸ்டாவின் சட்டத்தரணி அட்ரியானோ அயோவினெல்லி (Adriano Iovinelli) நீதிமன்றத்தில் வாதிடுகையில், தனது கட்சிக்காரர் எந்தவொரு மாறுவேடமும் இன்றி வெளிப்படையாகவே இவற்றைச் செய்ததாகவும், ஆரம்பத்திலிருந்தே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் யூடியூப் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டபோது டகோஸ்டா ஏளனமாகப் புன்னகைத்த விதம், அவருக்குத் தீவிர மனநலப் பரிசோதனை தேவைப்படுவதை உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
அல்பர்ட்டா மாகாணத்தில் 2026 செப்டம்பர் நிலவரப்படி, காவலில் உள்ள ஒருவருக்கு உளவியல் அறிக்கை பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி, தண்டனை விதிக்கப்பட்டு அவர் சமூகத்திற்குள் மீண்டும் விடுவிக்கப்படும்போது, இத்தகைய செயல்கள் தொடராமல் இருக்க முறையான சிகிச்சை அவசியம் என வலியுறுத்தினார்.




