
உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் இரண்டு முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
டினிப்ரோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு பாலங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களால் நகரின் மின்சாரம், நீர் மற்றும் வெப்பமூட்டல் விநியோகங்களுக்கும், சுரங்க ரயில் சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உக்ரைனின் செர்காசி பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம், ரஷ்யாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் கெர்ச் பாலம் மீது உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த பாலத்தின் ஊடான வாகனப் போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் உக்ரைனின் 2,049 ஆளில்லா வானூர்திகளையும் நான்கு நீண்டதூர ஏவுகணைகளையும் அழித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் பின்னணியில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




