அமெரிக்காவின் நியூயோர்க் நகர உணவகங்களில் கடல் நண்டுகள் மற்றும் நண்டுகள் உள்ளிட்ட ஓடுடைய கடல்வாழ் உயிரினங்களை உயிருடன் கொதிக்கும் நீரில் இட்டு சமைப்பதைத் தடை செய்யும் புதிய சட்ட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகர சபையின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளான ஒஸ்வால்ட் பெலிஸ் மற்றும் ஹார்வி எப்ஸ்டீன் ஆகியோர் இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய அறிவியல் ஆய்வுகளின்படி, இவ்வாறான உயிரினங்களை உயிருடன் கொதிக்கும் நீரில் இடும்போது அவை கடுமையான வலியை அனுபவிப்பதற்கான சான்றுகள் உள்ளதாக சட்ட முன்மொழிவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் கடல் நண்டுகள் மற்றும் நண்டுகளை உணவாக விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்படாது. அவற்றை உயிருடன் அவித்துச் சமைப்பது மாத்திரமே தடை செய்யப்படும்.
இந்த விதிமுறையை முதன்முறையாக மீறும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது. இரண்டாவது தடவை அல்லது அதற்குப் பின்னர் ஒவ்வொரு மீறலுக்கும் அதிகபட்சமாக 100 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இவ்வாறான உயிரினங்களை மயக்கமடையச் செய்யாமல் உயிருடன் அவித்துச் சமைப்பதைத் தடுக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
பிரித்தானிய அரசாங்கமும் விலங்கு நலனை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத்தகைய நடைமுறைக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரினங்களை உயிருடன் அவிப்பது விலங்கு வதையாகும் என்றும், உணவுக்காக உயிரினங்களைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கு தேவையற்ற வலியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சட்ட யோசனையை முன்வைத்த ஒஸ்வால்ட் பெலிஸ் தெரிவித்துள்ளார்.




