மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, தார் (Bitumen) இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் இலங்கையில் வீதி அபிவிருத்திப் பணிகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வீதிகளை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் இலங்கைக்கு வருடாந்தம் 15,000 முதல் 25,000 மெட்ரிக் டொன் வரையான தார் தேவைப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இலங்கைக்கு தார் வழங்கும் முக்கிய நாடாக இருந்து வந்துள்ளதுடன், டுபாய் சந்தை ஊடாகவும் ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட தார் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளது.
எனினும், தற்போது இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தார் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களின் பணிகள் ஆரம்பிக்கப்படும்போது, அதிகளவிலான தார் தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹர – கலகெதர பகுதி, குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை மற்றும் இங்கிரிய – இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை ஆகிய மூன்று திட்டங்களை முன்னெடுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களை உள்நாட்டு நிதி மூலம் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், திட்டச் செலவில் 15 முதல் 20 சதவீதம் வரை கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.




