முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் ரதீபன் (வயது 32) என்பவரை குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி சிங்கள மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை காவல்துறையினர் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த இளைஞனின் பெற்றோர், அதில் எழுதப்பட்டிருந்த விடயம் தமக்கு புரியவில்லை எனவும், அதனால் கடிதத்தை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.