கோட்டாபய ராஜபக்ச பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார்

Admin
Aug 16,2022

அகதி போன்று நாடு விட்டு நாடு செல்லும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு விஜயம் செய்வது பிரச்சினையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக முன்னாள் ஜனாதிபதியை பூரண பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வர தற்போதைய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டுமென எமது இலங்கை தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் விமுக்தி துஷாந்த கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் பின்னர், அவர் பதவியேற்கும் முன்னர் இருந்த வழக்குகளை மீள விசாரணை செய்து, தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பான்மை ஆட்சியாளர்களின் தன்னிச்சையான மற்றும் பொறுப்பற்ற நடத்தையினால் குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஜனாதிபதி பதவிக்கு பொறுப்புக்கூறும் செயற்பாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.