ஜெனீவாவை எதிர்கொள்ள விசேட பொறிமுறை; தயாராகிறது இலங்கை அரசு

Admin
Aug 14,2022

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையையொன்றை தயாரித்து வருகின்றது.

மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணகத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிக்கையை சமர்பிக்கவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் பற்றி தெரிவிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதனைவிட சட்டம், ஒழுங்கு, அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பாக எடுத்துரைக்கவுள்ள அதேவேளை ஐ.நா. கூட்டத் தொடரை எதிர்கொள்ள அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைந்து விசேட பொறிமுறையை தயாரிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இருப்பினும் மனித உரிமைப் பேரவையைப் பயன்படுத்தி தமது அரசியல் இலாபங்களை தேட சிலர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய நீதி அமைச்சர், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை அவ்வாறானவர்கள் விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.