ஆரம்பமாகியது ஐ.நா அமர்வு - இந்தியா செல்லும் அலி சப்ரி

Admin
Mar 01,2023

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார்.

இவர் நாளை மறுதினம் 2 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதுடன் 4 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு, இந்திய வெளியுறவு அமைச்சுடன் இணைந்து பார்வையாளர் ஆய்வு அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த மாநாட்டின் இரண்டு விஷேட குழு விவாதங்களில் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.

மாநாட்டின் பக்க அம்சமாக, பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகளில் கவனம் செலுத்தும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக அமைச்சர் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அலி சப்ரி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் எட்டாவது அமர்வில் கலந்துகொள்வதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.