பேரணியை புறக்கணித்தார்களா சாணக்கியன் - சுமந்திரன்

Admin
Feb 08,2023

தமிழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியானது நேற்றையதினம்(07.02.2023) நிறைவு பெற்றது.

இந்த எழுச்சி பேரணியில் அரசியல் பிரமுகர்கள்,மாணவர்கள், பொது மக்கள் என பல தரப்பினர் கலந்துக்கொண்ட போதிலும் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொள்ளாமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பேரணியில் வடகிழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றோருடன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ஆகியோரும் பங்குபற்றி இருந்தனர்.

அவர்களுடன் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜானமுத்து ஸ்ரீநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், பாக்கியம் அரியேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த பேரணியின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்குபற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

ஆனால் தொடக்கத்திலோ முடிவிலோ நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

இதன் ஏற்பாட்டாளர்கள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே பல அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.

இருப்பினும் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் பேரணியின் எந்தவொரு பகுதியிலும் கலந்துக்கொள்ளவில்லை என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒற்றுமையும் இணைப்பையும் வலியுறுத்தி இடம்பெற்ற இந்த பேரணியில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழ் தேசிய கருத்துக்களை அதிகளவில் கூறிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துக்கொள்ளாமை ஏற்பாட்டாளர்களுக்கு மற்றுமல்ல தமிழ் தேசிய பரப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசு கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களுள் ஒருவரான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அந்நிகழ்வை புறக்கணித்திருந்தார்.

இதேவேளை இலங்கைத் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளிலும் தனிநபர் ஆதிக்கத்தாலும் அதிருப்தி கொண்ட பலர் அந்த கட்சியின் 'B' அணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு வெளிப்பாடாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அணியின் ஆதரவின் வெளிப்பாடு இருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.