சர்வதேச நாணய நிதிய கடன் பெறுவதை பாதிக்கவுள்ள 'யுவான் வாங் 5'

Admin
Aug 12,2022

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் யுவான் வாங் 5 என்ற சீன ஆய்வு கப்பலின் வருகையை எதிர்ப்பதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் கடனைப் பெறும் நடவடிக்கையில் இலங்கை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொதியை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை கடன் நிலைத்தன்மை மதிப்பீட்டு அறிக்கையின் பிரதான கடன் வழங்குநர்களின் அங்கீகாரம் அவசியம்.

இலங்கைக்கு கடன் வழங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நடைமுறைக்கு சீனா தனது ஒப்புதலை வழங்க வேண்டியது அவசியமாகிவிட்டது.

ஆனால், சீனா விரும்பினால், இந்தச் செயற்பாடு நீண்ட காலத்திற்குத் தாமதப்படுத்தப்படலாம் எனவும், இதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் துயரமடையக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் வருவதை ஒத்திவைக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் செயல்முறையுடன் சீனா இணைக்கக்கூடும் என்பது கவலைக்குரிய செய்தி என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.