அமெரிக்கா பொங்கல் விழாவில் மாதிரி வாக்கெடுப்பு!

Admin
Jan 25,2023

தமிழீழம் – 98.4%      சமஷ்டி – 1.6%

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், சங்கம் குளோபல்  USA   உம் இணைந்து நாடாத்திய பொங்கல் விழா மாலை 6.00மணிக்கு அகவணக்கம், தமிழ் தாய் வாழ்த்து, மங்கல விளக்கேற்றல் ஆகியவற்றுடன் ஆரம்பமானது.

பாடல், நடனம், பேச்சு, கவிதை, தாயகப் பாடல்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. இந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன், சங்கம் குளோபல் USA  சார்பாக திரு. ந. இராஜேந்திரா ஆகியோரின் உரைகள் இடம்பெற்றிருந்தன.

மாதிரி வாக்கெடுப்பு தொடர்பான விளக்க உரையில் பிரதமர்,தமிழ்த் தேசிய பிரச்சனைக்கு தாயகமும் புலமும் உள்ளடக்கிய பொதுவாக்கெடுப்பின் மூலமாகவே தீர்வுகாணப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டிற்கு சர்வதேச ஆதரவு பெறுவதற்கு முதல்படி, இதுதான் எங்களுடைய, தமிழர்களுடைய நிலைப்பாடு என்பதை நாம் உலகிற்கு எடுத்தியம்ப வேண்டும். அச் செய்தியை நாம் இன்று நடாத்துகின்ற மாதிரி வாக்கெடுப்பின்  ஊடாக எடுத்தியம்புவோம். இவ்வாறான மாதிரி வாக்கெடுப்புகளை நாம் நடாத்துகின்ற எல்லா நிகழ்வுகளிலும், அரசியல், சமூக, சமய, ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர்கள்  நிகழ்வுகள் என்றாலும் சரி நாம் நடாத்தி, தமிழ்த் தேசிய இனத்தின் பெருவிருப்பை உலகிற்கு எடுத்தியம்புவோம். நீங்கள் உங்கள் தேர்வு எதுவாக இருந்தாலும், அதனை  எழுதுவதற்கு உங்களுக்கு உள்ள உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகர் என்ற வகையிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற முறையிலும் உங்கள் தெரிவாக தமிழீழத்தை எழுதும்படி வேண்டுகின்றேன். இது தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற விருப்பினால் எழுந்ததொன்றல்ல, மாறாக வரலாற்றின் அடிப்படையிலும், யதார்த்தத்தின் அடிப்படையிலும் எடுக்கப்படட முடிவாகும். என்று கூறினார்  

அவருடைய விளக்க உரையைத் தொடர்ந்து வந்திருந்த மக்களிடம் மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 98.4% தமிழீழம் என்றும், 1.6 சமஷ்டி என்றும் மக்கள் வாக்களித்திருந்தனர். இவ் மாதிரி வாக்கெடுப்பில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் நல்ல ஒரு நாளில், நல்ல ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கனடாவில் இருந்து வருகை தந்திருந்த கலைக்கோவில் திருமதி. வனிதா குகேந்திரனின் மாணவர்களின் பொங்கல் நடனம், எழுச்சி நடனம் என்பனவும், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த வைஷ்ணவி ஸ்ரீதரனின் மெல்லிசைப் பாடல்களும், Queens  நாவலர் தமிழ்ப் பாடசாலை மற்றும், Staten Island தமிழ் அறிவாலய மாணவர்களின் பாட்டு, பேச்சு, கவிதை, நடனம் என்பனவும் சிவராணி சின்னத்தம்பியின் Solo     வயலினிசையும் மிகச் சிறப்பாகவும் , நிகழ்வை மெருகூட்டியும் இருந்தன. 30 வருட கால தமிழ்த் தேசிய சேவையை பாராட்டி சங்கம் குளோபல் USA   திரு. ந. இராஜேந்திரா அவர்களால் கலைக்கோவில் திருமதி. வனிதா குகேந்திரன் அவர்கள் கௌரவிக்கப்படடார். முடிவில் பொங்கல் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவேறியது


Related News