அஜித்தை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது - துணிவு இயக்குநர்

Admin
Jan 07,2023

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் 11ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் படத்துக்கான ப்ரோமோஷன்கள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் இயக்குநர் ஹெச்.வினோத் பல பேட்டிகளை படம் குறித்து கொடுத்துவருகிறார். அந்தவகையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “துணிவு படத்தை பொறுத்தவரை படத்தின் முதல் பாதி முழுமையாக அஜித் ரசிகர்களுக்கான பகுதியாக இருக்கும். இரண்டாம் பாதி அனைவருக்குமான படமாக இருக்கும். துணிவை நீங்கள் எந்த ஜானரிலும் அடைக்கத் தேவையில்லை. இந்தப் படம் உங்களுக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுக்கும் படமாக இருக்கும்.

படத்தின் கருவை பொறுத்தவரை, ஆரம்பத்தில் போர் என்பது ஆயுதங்களால் நிகழ்ந்தது. காலப்போக்கில் அதன் வடிவங்கள் மாறிக்கொண்டேயிருந்தன. தற்போது அந்த போர் பணத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அரசியல் முதற்கொண்டு எல்லாமே இன்று பணத்தால்தான் நடக்கிறது. அதனால்தான் என் படங்களில் பணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பணத்தை லேயராக பயன்படுத்துகிறேன். இளைஞர்களிடமும், மக்களிடமும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறேன். அப்படி பணத்திற்கு பின்னாலிருக்கும் விஷயங்கள் குறித்தும், பணத்தை அடிப்படையாக கொண்டு வைத்தும் இந்தப் படம் உருவாகியுள்ளது.

படத்தில் மஞ்சு வாரியருக்கு அஜித்துக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் அதேசமயம் நாயகிகள் காதல் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகளில் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால், இதில் அப்படியில்லை. சின்ன சின்ன ஆக்‌ஷன் காட்சிகளில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ‘துணிவு’ படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதல்ல. உண்மைச் சம்பவங்களை தழுவி எடுத்தால் சர்ச்சைகள் வரும். அஜித்தை வைத்து அப்படியான ரிஸ்கை எடுக்க முடியாது.

மிகப் பெரிய நடிகர் ஒருவரின் படத்தை இயக்கும்போது, அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரஷர் கண்டிப்பாக இருக்கும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறோம். வியாபாரத்தைச் சார்ந்த கதையைத்தான் செய்கிறோம். அதில் சில சமரசங்கள் இருக்கும். ஆனால், அதேசமயம் வியாபாரத்திற்காக மக்களிடம் தவறான கருத்தை விதைத்துவிடக் கூடாது.

அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் படங்களை செய்ய வேண்டும் என்பதிலும் கவனத்துடன் இருப்போம். அஜித், விஜய் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு நிச்சயம் பிரஷர் இருக்கும்; அதை மறுக்க முடியாது. மற்றபடி கஷ்டப்படுவது என்பது பொதுவானதுதான். பெரிய நட்சத்திரங்களின் படங்களை இயக்கும்போது, கதைக்குள் சில மாற்றங்களை நிகழ்த்த வேண்டியிருக்கும். அது ஓவர் பில்டப்பாக மாறிவிடக் கூடாது. அது காமெடியாகிவிடும்” என்றார்.