தமிழ் தேசத்தை பாதுகாப்பதாக இலங்கை அரசியல் தீர்வு இருக்க வேண்டும்: வி.உருத்ரகுமாரன்

Admin
Jan 04,2023

இலங்கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் இனப்படுகொலையில் இருந்து தமிழ் தேசத்தை பாதுகாப்பதாக அமைய வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி விஸ்வநாதன் உருத்ரகுமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
 
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கருத்திற்கொண்டு, அரசியல் தீர்வு என்பது ஈழத்தமிழர்களால் தேர்தெடுக்கப்பட்ட தீர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்கும் என சில தரப்புக்களில் கூறப்படும் கருத்துக்கள் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. எனினும், இந்த அறிவிப்பு நகைப்புக்குரியது மற்றும் நகைச்சுவையானது என்று அரசியல் அறிவுள்ள அனைவருக்கும் தெரியும் என ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தமது அறிவிப்பின் மூலம், தமிழர்களின் தேசியப்பிரச்சினையை எந்தளவுக்கு வெளிப்படையாக தரம்தாழ்த்த முயல்கின்றார் என்பதை புரிந்துக் கொள்ள முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கான தீர்வின் போது, உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமைக்காக பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது யதார்த்தமானது. இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலும், உலகளவிலும் பலவீனமாக உள்ளது.

எனினும், சர்வதேச வல்லரசுகள் அதனை தோல்வியுற்ற நாடாக காட்டாமல் காப்பாற்றுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. இருந்த போதும், தற்போதைய நெருக்கடி நீண்ட காலத்திற்கு பல்வேறு வழிகளில் இலங்கை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுவதாக ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது, ஈழத்தமிழ் தேசத்தின் இருப்பு, தாயக பிரதேசம், சுயநிர்ணய உரிமை என்பன முதல்படியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.