யாழில் உள்ள மியன்மார் வாசிகளுக்கு 2023 ஆண்டு வரை விளக்கமறியல்

Admin
Dec 20,2022

யாழ்ப்பாணம், வெற்றிலைக் கேணிக்கு வடக்கே மீட்கப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 105 ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் 2023 ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்ட மல்லாகம் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மியன்மாரைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் பங்களாதேஷில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து இந்தோனேசியாவிற்கு படகு மூலம் பயணித்துள்ளனர்.

இவர்களை ஏற்றிச் சென்ற படகு இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த சனிக்கிழமை கட்டைக்காட்டு கடற்பரப்பிலிருந்து 5 கடல் மைல் தொலைவில் கரை ஒதுங்கியது.

இந்நிலையில் பிரதேச கடற்தொழிலாளர்களினால் இது தொடர்பாக சிறிலங்கா கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்கள் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்படை முகாமில் தங்கவைப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மல்லாகம் நீதிமன்ற நீதவான் அவர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போதே எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன் பின்னர் அவர்களை மிரிஹான தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த அகதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.