2000 நாட்களை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம்; ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

Admin
Aug 10,2022

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2000 நாட்களை எட்டுகின்ற நிலையில் அன்றைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

போர் முடிந்து 13 வருடங்களாகியும் எமக்கான தீர்வு கிடைக்காத நிலையில் தொடர்ச்சியாக நாம் போராடி வருகின்றோம். அரசிடம் நம்பிக்கை இழந்த நாம் இன்று சர்வதேசத்தினை நோக்கி எமது நீதிக்கான குரலை எழுப்பியுள்ளோம்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் மூலம் எமக்கான நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இழந்துள்ள நாம் அதனை நிராகரித்துள்ளோம். எனினும் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை விரைவுபடுத்துமாறு நாடாளுமன்றில் தெரிவிக்கின்றனர்.

உங்களது பதவிகளை பாதுகாப்பதற்காக மக்கள் விரும்பாத விடயங்களை நீங்கள் அங்கு கதைக்கிறீர்கள். இது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம். இதேநேரம் எதிர்வரும் 12.08 வெள்ளிக்கிழமை எமது தொடர்ச்சியான போராட்டம் 2000 நாட்களை எட்டுகின்றது.

இதனையடுத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

எனவே குறித்த போராட்டத்தில் அரசியல்கட்சிகள், பல்கலைகழக மாணவர்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசியம் பேசுவோர், பொதுமக்கள், வர்த்தகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சர்வதேச நீதிக்கான கோரிக்கையை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.