அமெரிக்காவின் தடைப்பட்டியலில் மேலுமொரு இலங்கை இராணுவ அதிகாரி

Admin
Dec 11,2022

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, மனித உரிமை மீறல்களுக்காக மற்றொரு இலங்கை இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது.

டிரிபோலி பிளட்டூன் என அழைக்கப்படும் இலங்கை இரகசிய இராணுவ படைப்பிரிவின் முன்னாள் தலைவர் பிரபாத் புலத்வத்த, 2018ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயரை சித்திரவதைக்கு உட்படுத்தியமை உட்பட குற்றச்சாட்டுக்களில் தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவித்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அதிகாரிக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து சொத்து மற்றும் நலன்களும் தடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவரது உடனடி குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அதிகாரியான புலத்வத்த இலங்கை இராணுவத்தின் இரகசிய படைப்பிரிவான, டிரிபோலி இராணுவ புலனாய்வுப் படைப்பிரிவை, கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள மையத்தில் இருந்து வழிநடத்தினார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கடினமான விசாரணைகளில், இந்த பிரிவு குறிப்பாக ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டது.

முன்னர், இந்த பிரிவு, யாழ்ப்பாணத்திலிருந்து இயக்கப்பட்டது.

புலத்வத்தவின் தலைமையின் கீழ் இயங்கும் இந்த படைப்பிரிவு, தி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் மற்றும் தாக்குதல், ரிவிர ஆசிரியர் உபாலி தென்னகோன் மற்றும் ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீதான தாக்குதல் உட்பட ஊடகவியலாளர்களுக்கு எதிரான சம்பவங்களில் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதேபோன்று இரண்டு இலங்கைப் படையினரையும் தடைப் பட்டிலில் சேர்த்தது.
 
கடற்படை அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இலங்கை இராணுவத்தின் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராகவே இந்த தடை விதிக்கப்பட்டது.

2020 இல், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், 2009இல் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட ஆயுத மோதலின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டின் பேரில், இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா மீது இந்த தடையை விதித்தது.