மற்றுமொரு 'சீன' யுத்தக் கப்பலும் கொழும்பு வருகிறது

Admin
Aug 09,2022

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் பயணிக்கவுள்ள நிலையில் மற்றுமொரு யுத்தக் கப்பலும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

சீனாவில் நிர்மாணிக்கப்பட்ட பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை வல்லமை கொண்ட பி.என்.எஸ் மைமூர் என்ற யுத்தக் கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தங்கியிருப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டைக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் பயணம் தொடர்பில் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, இந்தியா, குறித்த சீனக் கப்பல் பயணத்துக்கான உண்மைக் காரணத்தை கோரியதை அடுத்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை கோரியுள்ளதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகியிருந்தது.

எவ்வாறாயினும், சீனாவிடம் குறித்த கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.