மாவீரர்களை நினைவுகூரத் தடை- சமூக அமைப்புகளை அழைத்து பொலிஸார் மிரட்டல்

Admin
Nov 18,2022

முல்லைத்தீவில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை காரணம் கூறாது பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த முல்லைத்தீவு பொலிஸார், 'இறந்தவர்களை நினைவுகூரத் தடை' என்று தெரிவித்ததுடன், இது தொடர்பில் இன்பல அறிவுறுத்தல்களையும் விடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வடக்குமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் முல்லைத்தீவில் மாவட்ட தலைவி ம.ஈஸ்வரி, இலங்கைத் தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு நகர வர்த்தக சங்க தலைவர் க.கௌரிராசா, சமூக செயற்பாட்டாளர்களான பேதுருப்புள்ளை ஜெபநேசன், சிவநேசராசா ஆகியோரின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் ஒரு காகிதத்தில் அழைப்பை எழுதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு மாலை 5 மணிக்கு (நேற்று) வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையத்துக்குச் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக வகுப்பெடுத்துள்ளனர்.

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தலைமை வகிக்கக்கூடாது எனவும் பொலிஸார் தெரிவித்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான  வர்த்தமானியையும் பொலிஸார் கொடுத்து அதை வாசிக்கும்படி தெரிவித்து அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளனர்.