’உண்மையை கண்டறியும் பொறிமுறைக்கு ஒத்துழைப்பு’; தென்னாபிரிக்க ஜனாதிபதி உறுதி

Admin
Nov 18,2022

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று முன்தினம் (16) இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து உரையாடியனார். 

ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, நாடு திரும்பும் வழியிலேயே அவர் இலங்கைக்கு மிக குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 

இதற்கமைய இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் கட்டுநாயக்கவிலுள்ள விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, இலங்கையில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

விசேடமாக, சமூகங்களிடையே நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தை அடைவதற்கான நம்பகத் தன்மையுடனான உண்மையை கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதற்காக தென்னாபிரிக்காவின் உதவி, ஆலோசனை மற்றும் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கு நவம்பர் 16 ஆம் திகதி பிறந்தநாளாகும். அவரது 70ஆவது பிறந்த நாள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது