ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் திருகோணமலை ஆலயத்திற்கு செல்வராசா கஜேந்திரன் விஜயம்

Admin
Aug 08,2022

திருகோணமலை 64ம் கட்டை ராஜவந்தான் மலையில் இருக்கும் ஆலயத்திற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அண்மையில் விஜயம் செய்து அப்பிரதேச மக்களிடம் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள தமிழர்களின் தொன்மைவாய்ந்த ஆலயத்திற்குச் வழிபாடு செய்ய செல்வதற்கு, அங்குள்ள பிக்குகளும், இராணுவத்தினரும் தமிழர்களுக்குத் தடை விதித்து அதை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜவந்தான்மலைக்குச் சென்றுகொண்டிருந்த மக்கள், ஆலய மதகுருக்களை பிக்குகள் மற்றும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வைத்து அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையின் மேலுள்ள தமிழர்களின் தொன்மைவாய்ந்த ஆலயமும் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த சின்னங்களை அமைக்கும் செயற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
சிங்கள பௌத்த குடியேற்றங்கள்

இது தொடர்பில் செல்வராசா கஜேந்திரன், தொல்பொருட் திணைக்களத்திடம் அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்த பகுதிகளில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த போதும், 1964க்கு பின்னர் சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்கள் தமிழருக்கெதிரான வன்முறைகளாலும் அப்பகுதியிலிருந்து தமிழர்கள் வெளியேறிய நிலையில் தற்போது அடர்ந்த வனப்பகுதியாக காட்சியளிக்கின்றது.

அண்மைய ஆய்வுகளின் போது 05 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 03 கல்வெட்டுக்கள் 10 அல்லது11 நூற்றாண்டுக்குரியதெனவும், 02 கல்வெட்டுக்கள் 14ம் நூற்றாண்டுக்குரியதெனவும் கருதப்படுகின்றது.

இந்த கோவிலை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருட் திணைக்களம் முயற்சிகளை எடுத்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண, கடும்போக்கு பௌத்த சிங்கள இனவாதியான ஞானசார தேரர் போன்றவர்களை உள்டக்கி உருவாக்கப்பட்ட தொல்பொருட் செயலணி மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பல தொன்மைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவை பௌத்த சிங்கள சின்னங்களாக மாற்றும் செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.