வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்போம்

Admin
Nov 16,2022

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆகவே நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு பாரிய உணவுப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், பாதுகாப்பிற்கு பெருமளவில் செலவழிக்காமல் இதுபோன்ற விடயங்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிலையான நீண்டகால தீர்வுகளை இரு அமைச்சுக்களாலும் வழங்க முடியும் எனினும் விவசாயம் மற்றும் மீன்பிடி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.