நாட்டுக்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது; பட்ஜெட் தொடர்பில் மொட்டு மகிழ்ச்சி

Admin
Nov 14,2022

பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டுள்ள நாடு மற்றும் நாட்டின்  பொருளாதாரத்திற்கு உயிர் கொடுக்கும்  ஒரு புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின்  புதிய வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகங் கொடுக்க நேரிட்டது.

நாடு என்ற வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்திற்கு கட்சி என்ற வகையில் நாம் எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

மேலும் நாம் ஜனாதிபதி சந்தித்த போது இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படவுள்ள வரி தொடர்பில் மீளவும் ஆராயுமாறு கூறினோம். தற்போது பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு இருந்தது, ரஷ்யா-யுக்ரைன் போர் சூழல்  காரணமாக இதன் காரணமாக இலங்கையும்  பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள்.

மேலும் புதிய வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் பெற்று கொடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும்  அரசாங்கம் என்ற வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை.

 இதனை புரிந்து கொள்ளாத மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள் அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நாட்டு மக்களே நிராகரித்தார்கள்.
இந்நிலையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள  வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியிடம் நிவாரணங்கள் வழங்குமாறு கூறவில்லை.
நாம் பொருளாதார நெருக்கடியில் மீண்டும் மீளுவதற்கு ஆலோசனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் மாத்திரமே முன்னெடுத்து செல்வது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடி வருகிறோம். மேலும் நிவாரணங்கள் வழங்குவதற்கு இது பொருத்தமான நேரம் இதுவல்ல. வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பித்தல் மற்றும் அமைச்சு பதவிகள் நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியால் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும். அதனை ஜனாதிபதி முறையாக செயல்படுத்துவார்.

மேலும் வரவு- செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு ஆதரவினை பெற்றுக்கொள்வதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என்று கருதுகிறோம். எங்களுடைய தரப்பினர் நாட்டினுடைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இதனை பொறுப்புணர்ந்து செயற்படுவார்கள்.

அதனை விடுத்து எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெற வேண்டிய தேவை ஏற்படாது  என்று கருதுகிறேன் என்றார்.