"படையினருக்கு ஓர் அங்குல காணியைக் கூட கொடுக்க முடியாது"

Admin
Nov 14,2022

"வடக்கில் முப்படையினருக்குக் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துரையாடலை நாளை (15) செவ்வாய்க்கிழமை நடத்துவாராக இருந்தால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துவோம்." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் காணி அமைச்சின் மேலதிக செயலர், காணி ஆணையாளர் நாயகம், காணி உரித்து திணைக்களத்தின் ஆணையாளர், நில அளவையாளர் நாயகம், இராணுவம், கடற்படை, விமானப் படை என்பனவற்றுடன், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் காணி மேலதிக மாவட்ட செயலர்கள், பிரதேச செயலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தொடர்பில் கஜேந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

"காணி சுவீகரிப்புக்கான கலந்துரையாடல்களை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆளுநர் நடத்துவாராக இருந்தால் ஆளுநர் அலுவலகம் உட்பட பிரதேச செயலகங்களை முடக்கிப் போராட்டம் வெடிக்கும்.

ஆளுநருடைய இந்த முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். படையினருக்கு ஓர் அங்குல காணியைக் கூட கொடுக்க முடியாது.

இந்த விடயம் தொடர்பாக அரசியல் தலைவர்களுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையான முறையில் அதிகாரிகளை அழைத்து, அச்சுறுத்தி ,நெருக்கடிக்கு உள்ளாக்கி சம்மதம் பெறும் செயற்பாட்டை  ஆளுநர் மேற்கொள்கின்றார். அது சட்டவிரோதமான செயற்பாடு.

மக்கள் பிரதிநிதிகள் இராணுவத்துக்கு காணி வழங்குவதற்கு முற்றாக எதிர்ப்பை முன்வைக்கின்றோம். அதனை மீறி அவர் செயற்படுவாராக இருந்தால் பிரதேச செயலகங்களையும், ஆளுநர் அலுவலகத்தையும் முடக்கி போராடுவதற்கு ஆளுநராகவே எங்களைத் தள்ளுகின்றார் என்று தெரிவித்துக் கொள்வதோடு போராட்டம் வெடிக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கின்றோம்" - என்றார்.