விடுதலையானவர்கள் இலங்கை வருவதில் சிக்கல்

Admin
Nov 13,2022

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி பிணையில் விடுவிக்கப்பட்டு தனது தாயாருடன் தங்கியுள்ளார்.

விடுதலை குறித்து அறிவிக்கப்பட்டதும், நளினியின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திடுவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை நிறைவு செய்து 31 ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் இருந்து நளினி விடுதலையானார்.

இதனை தொடர்ந்து நளினியின் கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

வேலூரிலுள்ள பெண்கள் தனிச் சிறையில் இருந்து நளினியும் மற்றும் வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோர் அவர்களுக்குரிய விடுதலை நடைமுறைகள் முடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.

ரவிச்சந்திரன் மட்டும் தன்னுடைய சிறைவிடுப்பு நகலை ஒப்படைப்பதற்காக அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை சென்றிருப்பதால் அவரும் இன்று இரவுக்குள் விடுதலை ஆவார் என நம்பப்படுகின்றது.

சாந்தன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவரை விடுதலை செய்தாலும் இந்தியாவில் எங்காவது அவர் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக நாடு திரும்புவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த ஆறு பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைப்பட்டுள்ள இவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்லவோ, விரும்பினால் இலங்கையராக பதிவுசெய்துகொண்டு தமிழ்நாட்டிலேயே வசிக்கவோ அரசிடம் அனுமதி கோரப்போவதாகவும் அவர்கள் தரப்பு சட்டவாளர்கள் அறிவித்துள்ளனர்.